மதுரை: பொன்.மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா “சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியை தப்பவைக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்தார், எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இதையடுத்து ஐகோர்ட் உத்தரவின்படி சிபிஐ முதல்கட்ட விசாரணை நடத்தி, பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஐகோர்ட் கிளை, பொன்.மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதுதொடர்பாக ஓய்வு ஐஜி பொன். மாணிக்கவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் சிபிஐ பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதல் தகவல் அறிக்கை, போதிய விபரங்கள் இன்றி மேலோட்டமாக பதியப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு, இவ்வாறு வழக்குப்பதிவு செய்தால், வருங்காலங்களில் குற்றம்சாட்டப்படும் நபர்கள், எந்த விசாரணை அதிகாரி மீது வேண்டுமானாலும் புகார் கொடுத்து, இவ்வாறு வழக்குப் பதிவு செய்யலாமா? இது அமைப்பையே சீர்குலைக்காதா?. இவ்வாறு இருந்தால் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக, சுதந்திரமாக பணியாற்ற முன்வருவர்? பொன்.மாணிக்கவேலின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்.மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?
முறையாக பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க வேண்டும். முறையான விபரங்களின்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு உகந்தது அல்ல. எனவே பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூடாது. பொன். மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அலுவலராக பொறுப்பேற்பதற்கு முன்பும், பின்பும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, சிபிஐ தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.