சென்னை: பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா அளித்த மனுவுக்கு சினிமா பைனான்சியர் ககன் போத்ரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் இயக்குனர் கஸ்தூரிராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.65 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் அவர் அளித்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறி இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து கஸ்தூரிராஜாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கடன் பெறும்போது அளித்த வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தியதாக முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா தனிநபர் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டிய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், சினிமா பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குனர் கஸ்தூரி ராஜா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதி வேல்முருகன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கூறி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார். இதை அடுத்து திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா அளித்த மனுவுக்கு சினிமா பைனான்சியர் ககன் போத்ரா பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி .28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி கஸ்தூரிராஜா மனு: சினிமா பைனான்சியர் ககன் போத்ரா பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.