ஊரடங்கின் காரணமாகக் கடும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போதைய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிடப் பேரதிர்ச்சியை உருவாக்கியிருக்கின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9% சரிவைச் சந்தித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார இயக்கம் ஸ்தம்பித்துவிட்டது. நுகர்வும் முதலீடுகளும் குறைந்துவிட்டன. வேலையிழப்பும் வருமான இழப்பும் அதிகரித்தவண்ணம் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இந்தச் சரிவுநிலை கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியா சந்தித்துள்ள மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி என்று மதிப்பிடப்படுகிறது.
கட்டுமானத் துறை பணிகள் சரிபாதிக்கும் மேலாகக் குறைந்துவிட்டன. உற்பத்தித் தொழில் துறை 39% குறைந்துள்ளது. வணிகம், விடுதிகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் 47% சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பொருளாதாரத்துக்கு 60% பங்களிப்பை அளித்துவந்த சேவைப் பணித் துறையின் பங்களிப்பு இந்தக் காலாண்டில் 20.6% ஆகக் குறைந்துள்ளது. தனிநபர் நுகர்வுதான் பொருளாதாரத்தின் முக்கியமான இயக்குவிசை. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தனிநபர் நுகர்வு வளர்ச்சி விகிதம் 8.5% ஆக இருந்தது. தற்போது தனிநபர் நுகர்வு 24.5% சரிவைச் சந்தித்துள்ளது. உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் கரோனா பாதிப்புக்கு ஆளானதில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா 9.1% சரிவையும், இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேஸில் 0.3% சரிவையும் மட்டுமே சந்தித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த எண்கள் அரசைத் தலைகுனிய வைக்கக் கூடியவை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. ஆனால், இந்தியா இந்தச் சரிவிலிருந்து மீண்டெழும் என்றும், அடுத்த காலாண்டுகளில் படிப்படியாக வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வோம் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய பொருளாதார மீட்சிக்குக் குறைந்தபட்சம் இரண்டாண்டுகளேனும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கும்கூட பொறுப்பேற்பும் அர்ப்பணிப்புமிக்கக் கூட்டுச்செயல்பாடும் முக்கியம். ‘கடவுள் செயல்’ என்று அரசு தன் கைகளை விரிக்கும் இன்றைய அணுகுமுறையைத் தொடருமானால், ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் துயரமாக இந்த வீழ்ச்சி உருவெடுத்துவிடும். இந்தியாவைப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுக்க மத்திய அரசு உடனடியாக அடுத்த இரண்டாண்டுகளுக்கான ஒரு பொருளாதாரச் செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, நிதி நிர்வாகத்துக்குப் பேர்போனவர்களை உள்ளடக்கியதாக ஒரு வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் அந்தச் செயல்திட்டம் வகுக்கப்பட்டு செயலாக்கப்பட வேண்டும்.