தமிழகத்தில் பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு பரிசீலித்து அமல்படுத்த வேண்டுமென கல்வியாளர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (Economically Weaker Section) அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 5 ஆண்டுகளாகின்றன. இந்த ஒதுக்கீட்டின்படி தகுதியானவர்கள் யார் என்பதை மத்திய அரசு வரையறை செய்துள்ளது. மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்ப உரிய தகுதிகள் குறித்து வரையறை செய்து கொள்ளலாம். இந்த ஒதுக்கீட்டு கொள்கையை சிறப்பானது என்று பொருளாதார வல்லுநர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.