கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் விவரம் பின்வருமாறு..
*முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை விதிப்பு
*திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிப்பு
*சதீஷ், ஹரேன்பால் ஆகியோருக்கு தலா 3, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை விதிப்பு
*அதிமுக முன்னாள் நிர்வாகி அருளானந்தம், அருண்குமாருக்கு தலா 1 ஆயுள் தண்டனை
*ரூ.85 லட்சம் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும்.
*குற்றவாளிகள் 9 பேருக்கும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தை வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரவும் ஆணையிடப்பட்டுள்ளது.
வழக்கு கடந்துவந்த பாதை:
*கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார்.
*புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
*இந்த வழக்கு பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2019 ஏப்ரல் 25-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
*வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை 2019 மே 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் குற்றப்பத்திரிகை 2021 பிப்ரவரி, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் தனி அறையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
*வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஒருவர் தவிர மீதமுள்ள 7 பேர் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கி நடந்து வந்தது.
*கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது. மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடந்தது.
*இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.