போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் இல்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். எனவே, ஓட்டுநர், நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், விழாக் காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்குதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் பணியாளர் பற்றாக்குறையை போக்குவரத்துக் கழகங்கள் கையாண்டு வருகின்றன. அதே நேரம், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி, 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 1.10 லட்சம் பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இக்காலகட்டத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதனால், புதிய நியமனம் எப்போது என்ற கேள்வி வலுத்துள்ளது.