கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள பாக்கிய நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.கோத்தகிரி அருகே உள்ள பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 21 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை ஒருவர் மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்டு கடந்த டிசம்பர் 2024 வரை பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் படிப்பு கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், பலமுறை வட்டார கல்வி அலுவலரிடம் ஆசிரியர்களை அமர்த்த கோரிக்கை வைத்து இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிகிறது. மேலும் ஊர் சார்பாக கல்வி மேலாண்மை குழு சார்பாக புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை மாற்று ஆசிரியர் பணி பாக்கியநகர் பள்ளிக்கு வழங்கப்படவில்லை.
இதனால் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் பாக்கியநகர் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என கல்வி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வகுப்பை புறக்கணித்து பள்ளியின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post போதிய ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.