சென்னை: போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரசாத்தின் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதில் உள்ள வாட்ஸ் அப் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் ‘தீங்கரை’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்தப் படத்தை தயாரித்து வரும் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் தேவைப்படுவதாகக் கூறி, தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர். இதில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், அவரை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகியை விசாரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 5 வழக்குகளில் கைதான பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
The post போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.