லீட்ஸ்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்காக முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்குடன் கலந்துரையாடினார்.
அப்போது ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: டெஸ்ட் கேப்டனாக நான் தேர்வு செய்யப்படாததில் எந்த ஆடம்பரமான கதைகளும் இல்லை. நான் நீக்கப்பட்டதாக எந்த சர்ச்சையோ அல்லது தலைப்புச் செய்தியோ இல்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐபிஎல் தொடரின் போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் பேசினேன்.