ரோம்: போப் பிரான்சிஸ் உடல் நிலை சீரானதை அடுத்து அவர் இரவு முழுவதும் நன்றாக ஓய்வெடுத்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 14ம் தேதி முதல் ரோமில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். மருத்துவர்கள் குழு அவருக்கு தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த வாரம் அவருக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் இருமல் உள்ளிட்டவை ஏற்பட்டது.
இதனால் அவருக்கு புதிய தொற்று ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் அச்சமடைந்தனர். இதனை கண்டறிவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்று அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பொதுமக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நேற்று முன்தினமும் அவர் தனது நண்பகல் ஆசிர்வாதத்துக்காக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்தார். இதற்கு மாற்றாக போப் எழுதிய செய்தி வெளியிடப்பட்டது.
இதில் தன்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும், நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். உக்ரைன் மற்றும் பிற நாடுகளின் அமைதிக்காக பிரார்த்திப்பதாகவும், இங்கிருந்து போர் இன்னும் அபத்தமாக தெரிகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். போப் உடல்நிலை தொடர்பாக வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போப் உடல் நிலை நேற்று முன்தினம் முதல் சீராக இருக்கின்றது. இரவு நன்றாக ஓய்வெடுத்தார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post போப் உடல் நிலை சீரானது: வாடிகன் அறிவிப்பு appeared first on Dinakaran.