வாடிகன் சிட்டி: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வாடிகனில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் குவிந்தனர். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக்கோளாறு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் முழுவதும் குணமடைந்து கடந்த மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை(21ம் தேதி) போப் பிரான்சிஸ் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது மறைவையொட்டி பல்வேறு நாடுகளும் துக்கம் அனுசரித்து வருகின்றன. போப் பிரான்சிசின் உடல் அவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து கடந்த புதனன்று(23ம் தேதி) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலய சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நண்பகல் 12 மணி முதல் ஏராளமான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 130க்கும் மேற்பட்ட குழுவினர் வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு வருகை தர உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 90,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போப் பிரான்சிஸ் உடலுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருச்சி கிழக்குதொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து புனித மேரி மேஜர் பலிசிக்கா பேராலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஜனாதிபதி முர்மு வாடிகன் பயணம்
இதனிடையே போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வாடிகன் புறப்பட்டு சென்றார். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜார்ஜ் குரியன், கோவா பேரவை துணைத்தலைவர் ஜோஸ்வா பீட்டர் டி சவுசா ஆகியோரும் நேற்று வாடிகன் புறப்பட்டு சென்றனர். இவர்கள் போப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
The post போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வாடிகனில் இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.