போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன்விவரம் வருமாறு:
இரக்கத்தின் கலங்கரை விளக்கம்: பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,’ புனித போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இந்த துயரமான நாளில் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க சமூகத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். போப் பிரான்சிஸ், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மிக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக எப்போதும் நினைவுகூறப்படுவார். சிறு வயதில் இருந்தே அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு அவர் நம்பிக்கையின் உணர்வை தூண்டினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மதிப்புமிக்க மரபை விட்டுச்சென்றார்: கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ‘‘போப் பிரான்சிஸ் மறைவால் ஒட்டுமொத்த உலகமும் வருத்தமடைந்துள்ளது. அவர் மதங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் ஈடுபாட்டின் நிலையான சாம்பியனாக இருந்தார். பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வருதல்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் போன்ற காரணங்களை தீவிரமாக ஆதரித்தவர். உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு மிகவும் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்தார். உண்மையிலேயே அவர் ஆளுமையின் சின்னம், ஒரு சிறந்த மனிதாபிமானி, மிகவும் மதிப்புமிக்க மரபை விட்டுச்சென்றவர் என்று தெரிவித்துள்ளார்.
அச்சமின்றி பேசினார்: ராகுல் காந்தி
போப் பிரான்சிஸ் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார், சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றி பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றிய அவரது செய்தி மூலம் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார். எனது எண்ணங்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் உள்ளன.
சிறந்த மேய்ப்பர் விடை பெற்றார்: இத்தாலி பிரதமர்
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியோ மெலோனி தனது இரங்கல் செய்தியில், ‘‘ஒரு சிறந்த மனிதர் மற்றும் சிறந்த மேய்ப்பர் விடைபெறுவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வரலாற்றில் முதல் லத்தீன் அமெரிக்க போப். ஏழைகள் மீதான தனது பணிவான செயல்பாடு மற்றும் அக்கறையால் உலகை வசீகரித்தவர்” என்று தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் மகிழ்ச்சி, நம்பிக்கை: பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்: பியூனஸ் அயர்சிலிருந்து ரோம் வரை ஏழைகளுக்கு திருச்சபை மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும் என்று போப் விரும்பினார். அது மனிதர்களை தங்களுக்குள்ளும், இயற்கையுடனும் ஒன்றிணைக்க வேண்டும் . இந்த நம்பிக்கை என்றென்றும் அவருக்கு நிலைத்திருக்கட்டும்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்
போப்பை நேசித்த மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்களின் இதயம் துடிக்கிறது. அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இன்று(நேற்று) மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்:
ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் எல்லையற்ற இரக்கம் கொண்டவர். மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், பிணை கைதிகள் பாதுகாப்பாக திரும்பவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையில் நம்புகிறேன்.
அர்ப்பணிப்பு கொண்டவர்: இங்கி. மன்னர் சார்லஸ்
இங்கிலாந்தில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி ஆகியோர், போப் தனது வாழ்நாள் முழுவதும் திருச்சபையுடனும், உலகத்துடனும் ஈஸ்டர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பதை அறிந்து எங்களது கனத்த இதயங்கள் ஓரளவு நிம்மதியடைந்தது. அவரது கருணை, திருச்சபையின் ஒற்றுமைக்கான அக்கறை மற்றும் மற்றவர்களின் நலனுக்காக உழைக்கும் எண்ணம் கொண்டவர்களுக்காக அவர் காட்டிய அயராத அர்ப்பணிப்புக்காக நினைவுகூரப்படுவார்\” என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்
ஈஸ்டர் ஞாயிறு அன்று வாடிகனில் இருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், போப் பிரான்சிசை சந்தித்தார். அவரே போப் பிரான்சிசை சந்தித்த கடைசி உலக தலைவர். இந்த சந்திப்பு குறித்து வாடிகன் வெளியிட்ட வீடியோவில், துணை அதிபர் வான்ஸ் போப்புடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவிக்கிறார். சக்கர நாற்காலியில் போப் அமர்ந்துள்ளார். அவரிடம், வான்ஸ், ‘‘நீங்கள் பூரண உடல் நலமின்றி இருப்பதை அறிவேன், ஆனாலும் உங்களை நல்ல உடல் நலத்துடன் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார். இதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் போப்பிடம் மொழிபெயர்த்து கூறினார். பின்னர் ‘இவை உங்கள் குழந்தைகளுக்கு’ என அந்த மொழிபெயர்ப்பாளர் கூறி போப் சார்பாக சாக்லேட்களையும், பரிசுகளையும் வழங்கினார். அதற்கு வான்ஸ் நன்றி தெரிவித்தார். போப்புடன் வான்ஸ் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
The post போப் பிரான்சிஸ் மறைவு: உலக தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.