சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் வீட்டிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்ததாக தமிழிசை மீது சென்னை காவல் துறை வழக்கும் பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.