கீவ்: பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினர். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்தது. அப்போது, உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் உறுதி அளித்தார். ஆனாலும், மேற்குல நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை நிறுத்தாவிட்டால் முழு போர்நிறுத்தம் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த அழைப்புக்கு பின்பு சிறிது நேரத்தில் உக்ரைனில் வான்வழி தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகள் ஒலித்தன. பல இடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார்.