உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி 6 வாரங்கள் எட்டியுள்ள நிலையில் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி 6 வாரங்கள் எட்டியுள்ள நிலையில் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா படை, உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. 6 வாரங்களை கடந்து தாக்குதலை தொடர்ந்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன. போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதம் தாண்டி தொடர்ந்து வரும் நிலையில், போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கீவ்வை கைபற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைன் – ரஷ்யா இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்ய தரப்பில் கீவிலிருந்து படைகளை குறைத்து கொள்வதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, செர்னோபில் அணு உலையைச் சுற்றி ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபடுவதால் அணு உலையில் உள்ள வேதி பொருட்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரஷ்யா படைகள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரஷ்சுக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச்சூழலில் உக்ரைன் வந்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையத்தலைவர், கடும் தாக்குதலுக்கு உள்ளான லிவிவ் நகரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எங்களது கூட்டு அமைப்புகளின் ஆதரவை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பன்னாடு அகதிகளுக்கான அமைப்பு, உக்ரைனிலிருந்து சென்ற 2 லட்சம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனிலிருந்து 23 லட்சம் பேர் போலந்துக்கும், பல ஆயிரக்கணக்கானோர் ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளது.