டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தப்படி, 2ம் கட்டமாக இஸ்ரேலின் 4 பெண் ராணுவ வீரர்களை ஹமாஸ் நேற்று விடுவித்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 16ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற 100 பணய கைதிகளில் 33 பணய கைதிகளை 6 வாரங்களில் விடுவிக்க ஹமாஸ் அமைப்பும், இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,904 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து கடந்த 19ம் தேதி இஸ்ரேலின் 3 பெண் பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவித்ததை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் 2ம் கட்டமாக நேற்று கரீனா அரிவ்(20), டேனியலா கில்போவா(20), நாம லெவி(20) மற்றும் லிரி அல்பாக்(19) ஆகிய நான்கு பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளாவர். இந்த நால்வருக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 200 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. வடக்கு காசாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்: ஹமாஸ் பிடித்து சென்றுள்ள ஏராளமான இஸ்ரேலிய பணய கைதிகளில் அர்பெல் யஹூத் என்ற பெண் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேல் விடுவித்த பாலஸ்தீனர்களை வடக்கு காசாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
The post போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் 4 இஸ்ரேலிய பெண் வீரர்களை விடுவித்த ஹமாஸ்: பதிலுக்கு 200 பாலஸ்தீனர்கள் விடுதலை appeared first on Dinakaran.