சென்னை: போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். பொதுமக்கள் எதற்காகவும் அச்சப்பட தேவையில்லை என புதிதாக தேர்வு செய்யப்பட்ட 514 ஊர்க்காவல்படை பெருநகர காவல்துறையில் இணைக்கும் நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 126 பெண்கள் உட்பட 514 ஊர்க்காவல்படையினர் சென்னை பெருநகர காவல்துறையினருடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் வணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை போலீஸ் கமிஷனர் அருண் ஏற்றுக்கொண்டார். பயிற்சியின் போது சிறந்து விளங்கிய 11 ஊர்க்காவல்படை வீரர்களுக்கு பரிசு வங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் அருண் பேசியதாவது: புதிதாக தேர்வான ஊர்காவல்படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டேன். அவர்களின் அணிவகுப்பு அனைத்தும் காவல்துறையை போன்று இருக்கிறது. எந்த ஒரு வகையிலும் காவல்துறைக்கு விட்டுகொடுக்காத வகையில் இணையாக உள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள். போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரித்துள்ளோம். அதேபோல் கண்காணிப்பை அதிகரித்து இருக்கிறோம். எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமோ, அந்த இடங்களில் நமது உளவுத்துறை மற்றும் காவல்துறையும் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தியேட்டர், வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரை என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அதிகரித்து இருக்கிறோம். ஐபிஎஸ் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சென்னை முழுவதும் வாகன சோதனைகள் அதிகரித்து இருக்கிறோம்.
அதேவகையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணித்து வருகிறோம். சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் தங்களது இயல்பான நிலையில் இருக்கலாம். எதற்காகவும் அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, ஊர்க்காவல்படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு பொதுமக்கள் எதற்காகவும் அச்சப்பட தேவையில்லை: ஊர்க்காவல்படை நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பேச்சு appeared first on Dinakaran.