ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். நேற்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தகவலின்படி காட்பாடி ரயில்வே போலீசார் சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல் வருமாறு: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் மணிகண்டன் (30). இவருக்கும் சோளிங்கர் பகுதியை சேர்ந்த விஜிதா என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு காரணமாக விஜிதா குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு பிரிந்து சென்றார்.
இதற்கிடையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காரமடைக்குப்பம் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகளான இன்ஜினியரிங் மாணவி கோகிலா(19)வுக்கும், மணிகண்டனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி 31ம் தேதி கோகிலா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு மணிகண்டனை பார்க்க வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து 3 மாதங்களாக காட்பாடி பகுதியில் வசித்துள்ளனர். கோகிலாவின் தாய் புகாரின்படி நெல்லிக்குப்பம் போலீசார் நடத்திய விசாரணையில் கோகிலா காட்பாடியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோகிலாவையும் மணிகண்டனையும் நேற்று காலை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது.
இருவரும் இரு வேறு சமூகத்தினர் என்பதால் காவல் நிலையம் சென்றால் பிரித்து விடுவார்கள் என எண்ணி, லத்தேரி ரயில் நிலையம் அருகே பைக்கை நிறுத்தி விட்டு, அவ்வழியாக வந்த ரயில் முன்பு இருவரும் ஒன்றாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.
The post போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் ரயில் முன் பாய்ந்து காதல் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.