* ஏன் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை தரப்பில் சொல்ல மறுக்கிறீர்கள்.
* அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்? யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? காவல் துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் போலீசார் இப்படித்தான் நடந்து கொள்வார்களா?
* எதை வைத்து அடித்தார்கள்? இவ்வளவு காயங்கள் உள்ளது. ஒரு மாநிலமே தன் குடிமகனை கொலை செய்துள்ளது.
* காவல் நிலைய சிசிடிவியை காண்பித்துள்ளனர். கோயில் சிசிடிவி காண்பிக்கப்படவில்லை. அந்த சிசிடிவி காட்சிகள் எங்கே?
மதுரை: போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த விவாகரத்தில் காவல்துறையின் செயலுக்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்து உள்ளனர். நீதி விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் 8ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலானய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆஜராகி, ‘‘நகை திருட்டு வழக்கின் புகார்தாரர் நிகிதா என்பவரின் உறவினர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் வழக்கு பதியாமல் விசாரணைக்கு அழைத்துச்சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் சிலர் ரூ.50 லட்சம் இழப்பீடாக தருவதாக இறந்தவரின் தாயிடம் சமரசம் பேசியுள்ளனர்.
விசாரணையில் அஜித்குமார் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் நாடகமாடியுள்ளனர். தென்னந்தோப்பிற்குள் வைத்து தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலின் போது சிவகங்கை எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார்’’ என்றார்.
வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி, ‘‘திருப்புவனம் இன்ஸ்பெக்டரிடம் எஸ்பி, நன்றாக கவனியுங்கள் என கூறியதாக தலைமை காவலர் கூறியுள்ளார். காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? அஜித்தை போலீசார் கட்டி வைத்து சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் செல்போனில் ஜன்னல் வழியாக படம் எடுத்துள்ளார்’’ எனக்கூறினார். அந்த காட்சிகள் நீதிபதிகள் முன் போட்டுக் காட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘அஜித்குமாரை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. இளைஞரை விசாரிக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பியை உடனடியாக மாற்றுவதற்கான காரணம் என்ன? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை. சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? ஏன் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை தரப்பில் சொல்ல மறுக்கிறீர்கள். அஜித்குமாரின் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை துவக்கியதா? போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன. 2 மணி நேரங்களில் விசாரிப்பீர்களா? அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்? யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? காவல் துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் போலீசார் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? உயரதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைகளுக்கு போலீசார் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கையை மாஜிஸ்திரேட்டிடம் ஏன் இன்னும் அளிக்கவில்லை?. இளைஞரின் உடற்கூராய்வு அறிக்கையை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் பிற்பகலில் மீண்டும் விசாரணை துவங்கியது. அப்போது அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை பார்த்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சியடைந்து, ‘‘காவலர்கள் கைது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை. திருப்புவனம் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஏற்கத்தக்கது. சம்பவம் அனைத்தும் கோயிலில் நடந்துள்ளது. காவல் நிலையத்தில் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், காவல் நிலைய சிசிடிவியை காண்பித்துள்ளனர். கோயில் சிசிடிவி காண்பிக்கப்படவில்லை. அந்த சிசிடிவி காட்சிகள் எங்கே? நடந்த சம்பவங்கள் சிசிடிவியில் பதிவாகி உள்ளதா?’’ என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், ‘‘இளைஞர் அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை. அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயார். அறிக்கையை தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் வேண்டும்’’ என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். நீதிபதி விசாரணை என்றால் நீதி விசாரணை என்றே அழைக்கப்படும்.
வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல சாட்சிகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. தனது விசாரணை அறிக்கையை ஜூலை 8ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திருப்புவனம் இன்ஸ்பெக்டர், சிவகங்கை எஸ்பி உள்ளிட்டோர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மதுரை மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும். ஜூலை 8ம் தேதி வரை அனைத்து ஆவனங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
சாட்சியங்களின் பாதுகாப்பை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டது உறுதியானது என்பதால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, அரசுத் தரப்பில் மேல் நடவடிக்ைக உள்ளிட்ட விபரங்கள் குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
* 44 இடங்களில் காயங்கள் மிளகாய் பொடி தூவி சித்ரவதை: பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்
நீதிபதிகளிடம் அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை பார்த்த நீதிபதிகள், ‘‘உடலில் எந்த உறுப்பையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை. பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித்தின் பிறப்பு உறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடி உள்ளது. எப்ஐஆர் பதியாமல் சிறப்புப்படையினர் எப்படி வழக்கை கையில் எடுத்தனர்? இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்க கூடாது.
சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்பவர்கள் கூட இதுபோல தாக்க மாட்டார்கள். மிருகத்தனமாக தாக்குதல் இது. 44 காயங்கள் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது.
இது கொடூரமான சம்பவம். வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் சாட்சியங்களை சேகரித்தது யார்? அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறையை ஏன் சேகரிக்கவில்லை? அப்படி என்றால் எஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எதை வைத்து அடித்தார்கள்? இவ்வளவு காயங்கள் உள்ளது. ஒரு மாநிலமே தன் குடிமகனை கொலை செய்துள்ளது’’ என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
The post போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் அடித்துக்கொலை: நீதிபதி தலைமையில் நீதி விசாரணை: 8ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு: காவல்துறைக்கு கடும் கண்டனம் appeared first on Dinakaran.