நியூயார்க்: இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ் ராஜூ, சரிதா ராஜூ தம்பதி அமெரிக்காவில் குடியேறி அங்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களின் மகன் எதின் ராஜூ(11). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு பிரகாஷ் ராஜூ, சரிதா ராஜூ இருவரும் விவகாரத்து பெற்று விட்டனர். விவாகரத்துக்கு பிறகு சரிதா வர்ஜீனியா மாகாணம் பேர்பெக்ஸ் நகரில் வசித்து வந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தந்தையுடன் இருந்த மகன் எதின் ராஜூவை, விடுமுறை நாள்களில் சரிதா அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்து கொள்வார். அதன்படி அண்மையில் மகன் எதின் ராஜூவை அழைத்து சென்ற சரிதா, டிஸ்னிலேண்ட் செல்வதற்காக சான்டா அனா என்ற பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த மார்ச் 19ம் தேதி எதின் ராஜூவை தந்தையிடம் அனுப்ப திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அன்று காலை அந்த பகுதி காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்ட சரிதா, தன் மகன் எதின் ராஜூவை கழுத்தை அறுத்து கொன்று விட்டதாகவும், தற்கொலை செய்து கொள்ள மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சான்டா அனா பகுதி காவல்துறையினர் சரிதா தங்கி இருந்த அறையில் எதின் ராஜூ ரத்த வௌ்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சரிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு சரிதா கைது செய்யப்பட்டுள்ளார். சரிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.
The post மகன் கழுத்தை அறுத்து கொன்ற இந்திய வம்சாவளி பெண் தற்கொலை முயற்சி: அமெரிக்காவில் பயங்கரம் appeared first on Dinakaran.