புதுச்சேரி: புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் இந்த உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2025-26 நிதியாண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் விவரம்: > தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு அறிமுகப்படுத்தப்படும். விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.2,000 வரும் நிதியாண்டு முதல் தரப்படும். வனமில்லா பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.