விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரிடமிருந்து பெரிய அளவில் இன்னிங்ஸ்கள் வெளிப்படவில்லை. எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர்கள் 2 பேரும் தங்களது சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும். கடந்த 2 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா ஆகியோர் இன்றைய ஆட்டத்திலும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.