* ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் நேரில் கோரிக்கை
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை செயற்படுத்துவதில் எப்போதும் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊதியத்திற்கான நிதியினை உடனடியாக விடுவிக்க கோரி 13.01.2025 அன்று கடிதம் வாயிலாக இந்திய பிரதமரை கேட்டுக்கொண்டார்.
இன்றைய தேதி வரை நிதி விடுவிக்கப்படாத நிலையில் 27ம் தேதி (நேற்று) டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியினை உடனடியாக விடுவிக்கக் கோரியும், 2024-25ம் ஆண்டிற்கு கூடுதல் மனித சக்தி நாட்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான கடிதம் வழங்கி கேட்டுக்கொண்டனர். அப்போது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.யாதவ் உடன் இருந்தார்.
The post மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,635 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் appeared first on Dinakaran.