மும்பை: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இக்கூட்டணி 57 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும், 95 தொகுதிகளில் போட்டியிட்ட சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.