மும்பை: மகாராஷ்டிர முதல்வராக நாளை பதவியேற்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், மும்பையில் இன்று கூடிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் முன்னாள் முதல்வரும் மத்திய பார்வையாளருமான விஜய் ரூபானி இதனை அறிவித்தார். அப்போது பேசிய மற்றொரு மத்திய பார்வையாளரான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவை நாட்டின் முதல் மாநிலமாக நாம் உருவாக்குவோம் என குறிப்பிட்டார்.