டெல்லி: மகா கும்பமேளாவில் மாயமான ஆயிரக்கணக்கான இந்துக்களின் குடும்பங்களுக்கு பாஜகவின் பதில் என்ன? என நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 (புதன்கிழமை) மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். அந்த வகையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மகா கும்பமேளாவில் மாயமான ஆயிரக்கணக்கான இந்துக்களின் குடும்பங்களுக்கு பாஜகவின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். மேலும், மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பாஜக ஏதாவது செய்ய வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்கான இந்துக்களை காணவில்லை. அவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும். காணவில்லை என புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் கூட உ.பி. அரசு கிழித்து வருகிறது. மாயமானவர்களைக் கண்டுபிடிக்க குறைந்தபட்ச முயற்சியை அரசு எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
The post மகா கும்பமேளாவில் மாயமான ஆயிரக்கணக்கான இந்துக்களின் குடும்பங்களுக்கு பாஜகவின் பதில் என்ன?: அகிலேஷ் யாதவ் கேள்வி appeared first on Dinakaran.