கொல்கத்தா: பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளா குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா) ஆக மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட கும்பமேளா கூட்ட நெரிசல் மரணங்களை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, விஐபிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் நிலையில், எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "இது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா). நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனித கங்கை அன்னையை மதிக்கிறேன். ஆனால் இந்த கும்பமேளாவில் எந்தத் திட்டமிடலும் இல்லை. பணக்காரர்கள், விஐபிக்கள் ரூ.1 லட்சத்துக்கும் கூடாரங்கள் பெறுவதற்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், உரிய ஏற்பாடுகளை செய்து தருவது முக்கியமானது. நீங்கள் என்ன ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள்?