புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், “நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம்” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதில், இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்தத் தகவல் இதுவரை உத்தரப் பிரதேச அரசு அல்லது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.