ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண்டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்றனர். இவர்களில் ஒருவர் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் மூடியை தட்டிக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்ட காட்டு யானைகள் கூட்டம், திடீரென இவர்களை சுற்றி வளைத்து ஆக்ரோஷமாக தாக்கத் தொடங்கின.