மும்பை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு தெரிவித்து உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர் வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பின் 32-வது ஆண்டு நினைவுநாளில் உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் பேரவையின் மேலவை உறுப்பினர் மிலிந்த் நர்வேகர், மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.