புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் சிறிது நேரம் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மக்களவையில், பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசத் தொடங்கினார்.
அப்போது எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி, மத்திய அமைச்சரை பேச விடாமல் செய்தனர். தொடர்ந்து கோஷம் எழுப்பிய அவர்கள், கும்பமேளாவில் நடந்த நெரிசல் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். சுமார் 5 நிமிடங்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.