சென்னை: ஃபெஞ்சல் புயலின்போது மின் விநியோக சாதனங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 10,000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியது: “ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. இதுவரை, மின்சாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை. மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.