சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலையில் பெய்த அதிகப்படியான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. அதேபோன்று கிருஷ்ணகிரி மலையை ஒட்டியுள்ள வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் மலையில் இருந்து 100 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பாறை உருண்டு விழுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஒருவரின் வீடு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களையடுத்து இதுபோல மலை அடிவாரத்தில் ஆபத்தான பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்குவது யார், இதுபோன்ற பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகும்போது அதை தடுப்பதற்கு ஆளே இல்லையா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. விபத்து நடந்த பகுதிகள் வெறும் உதாரணம் மட்டுமே. இதுபோன்று தமிழகம் முழுவதும் கடலோரம், ஆற்றின் கரையோரம், நீர்வழித்தடங்கள், சிற்றாறு, ஓடை, கால்வாய் பகுதிகள், மலை அடிவாரம், காய்ந்துபோன நீர்நிலைகள் என பல பகுதிகளில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.