மதுரை: ‘மதுரை மாவட்ட மக்களும், தமிழக அரசும் காட்டிய கடும் எதிர்ப்பே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் ஒன்றிய அரசு பணிய காரணம். இது நமக்கான வெற்றி’ என அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் கொண்ட நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு கடந்தாண்டு நவ. 7ல் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது.
இத்திட்டத்தால், தமிழ்நாடு அரசால் அரிட்டாபட்டி பகுதியில் அறிவிக்கப்பட்ட பல்லுயிர் மரபுத்தளம் அழிவதுடன், பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாய நிலங்கள், அழகர்கோவில் மலைப்பகுதியின் காப்புக் காடுகள் சிதையும் நிலை ஏற்பட்டது. தமிழி கல்வெட்டுகள், பழமையான கோயில்கள் அழிவதுடன், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் பாதிக்கும் சூழலும் உருவானது. 11 கிராமங்கள் மட்டுமின்றி மேலூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்விடமும் பறிபோகும் நிலை ஏற்பட்டதால், இப்பகுதியினரும், விவசாய சங்கத்தினரும் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்தனர்.
இதையடுத்து, டிச. 9ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான தனித்தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அரிட்டாபட்டியில் நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன். அப்படி ஒரு நிலை வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்’ என சூளுரைத்திருந்தார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தால் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், டிச. 24ல் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு அறிவித்தது.
இதில் திருப்தி அடையாத மேலூர் கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜன. 7ம் தேதி ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் மதுரைக்கு நடைபயண போராட்டம் நடத்தினர். பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடைபயணமாக வந்தனர். 20 கிமீ நடைபயணம் முடிய சுமார் 7 மணி நேரம் ஆன நிலையில் மதுரையே திக்குமுக்காடியது. மதுரை மாவட்ட மக்களின் கடுமையான அதிருப்தியில் இருந்து தப்புவதற்காக, உள்ளூர் முக்கியஸ்தர்கள் ஏழு பேருடன் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் ெடல்லி சென்று ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு மற்றும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதையடுத்து அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட கிராம விவசாய சங்க நிர்வாகிகள் முத்துவீரணன், ஆனந்த், ராமச்சந்திரன், சேதுராமன் உள்ளிட்ட 18 பேர் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். டங்ஸ்டன் திட்டம் ரத்தாக காரணமாக இருந்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், ஜன. 26ல் நடக்கும் நன்றி தெரிவிப்பு மற்றும் பாராட்டு கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மதுரை வந்தார். பகல் 1.30 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தடைந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கார் மூலம் ரிங் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 4.40 மணியளவில் காரில் அரிட்டாபட்டி கிளம்பினார். ஒத்தக்கடை துவங்கி அரிட்டாபட்டி வரை வழிநெடுக சாலையின் இருபுறமும் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், கட்சியினர் திரண்டு நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அங்குள்ள கிராமச் சாவடி கலையரங்க மேடையில் பேசிய முதல்வர், பின்னர் அங்கிருந்து கிளம்பி மாலை 6 மணிக்கு அ.வல்லாளபட்டி கிராமத்தை சென்றடைந்தார். வழிநெடுக 4 கி.மீ தூரமும் இருமருங்கிலும் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். வல்லாளபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் கிராம அம்பலக்காரர் சேதுராகவன் வரவேற்றார். முதலமைச்சருக்கு உலோகத்தால் ஆன வெங்கடாஜலபதி சிலை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பிற்கு உங்களிடம் நன்றி தெரிவிக்க வந்துள்ளேன். பூரிப்புடனும், பெருமையுடனும் நன்றி தெரிவிக்கிறேன்.
கிராம மக்களின் அன்புக்கட்டளையை ஏற்று இங்கு வந்திருக்கிறேன். இது எனக்கான பாராட்டு விழா அல்ல. உங்களுக்கான பாராட்டு விழா. நீங்கள் உறுதியாக நின்று, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள். ஆகவே உங்களுக்குத்தான் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நான் வேறு, நீங்கள் வேறு அல்ல. இது நமக்கான வெற்றி. டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டார்கள். ஆனால் மக்கள் சக்தியுடன் இதைத்தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அதற்கான வெற்றி விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மகிழ்வான இந்நேரத்தில் நான் உங்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். உங்கள் முக மலர்ச்சியை, ஆர்வத்தை பார்க்கும்போது தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது காலமில்லை. விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லும் பேரணி பத்திரிகையில் வெளிவருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். அப்படி டெல்லி போராட்டம் 2 வருடமாக நடந்து வருகிறது. ஆனால் டங்ஸ்டன் போராட்டத்தில் 3 மாதத்தில் வெற்றி கண்டுள்ளீர்கள். ஒன்றிய அரசு பணிந்ததற்கு நீங்களும், தமிழக அரசும் காட்டிய கடும் எதிர்ப்புதான் காரணம். உங்களுக்காகத்தான் இந்த ஆட்சி. நமக்கு கிடைத்த இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல.
மிகப்பெரிய வெற்றி. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2 தடவை எதிர்ப்பு தெரிவித்தோம். கடிதம் எழுதியுள்ளோம். அதையே அரசியல் காரணத்திற்காக சிலர் மறைக்கப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே இத்திட்டத்தை எதிர்த்தோம். ஆனால் திட்டமிட்டு பொய் பிரசாரம் நடத்தி வருகிறார்கள். எழுதிய கடிதங்களையும் மீறி ஒன்றிய பாஜ அரசு, ஏலம் விடும் நிகழ்ச்சியை செய்தார்கள்.
குறிப்பாக 23.11.2024 அரிட்டாபட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து எதிராக தீர்மானம் போட்டார்கள்.
இதில் அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து கொண்டு இந்த திட்டத்தை அமைக்க தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதி தரமாட்டார் என எடுத்து சொல்லிருக்கிறார். தமிழக அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவது உறுதி என கூறினார். நீங்கள் அதை மறந்திருக்க மாட்டீர்கள். அதன் பிறகு 29.11.24 அன்று மேலூரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடை பெற்றது. டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழக அரசு நிச்சயம் கொண்டு வராது என ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கூறினார். அன்றைய தினமே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினேன்.
அன்று மாலையே மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அனைத்து வணிகர் அமைப்புகளுடன், பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகு சட்டமன்றத்தில் 9.12.24 அன்று டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நானே தீர்மானத்தை நிறைவேற்றினேன். நான் இருக்கிற வரை நிச்சயம் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு வாய்பே இல்லை. நான் அனுமதி தந்தால் தான் வரும். அப்படி வந்தால் நான் தமிழக முதல்வராக இருக்க மாட்டேன் என்றேன்.
அதற்கு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஏன் அந்த வார்த்தையை கூறினீர்கள் என்றனர். எனக்கு பதவி பற்றி கவலையில்லை, மக்களை பற்றிதான் கவலை, மக்களுடைய பிரச்னை தான் கவலை என்பதை தெளிவாக எடுத்து சொன்னேன். உங்கள் உறுதியான போராட்டத்தை மதித்து ஒன்றிய அரசு ரத்து செய்திருக்கிறது. நான் பதவியேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தான் பதவியேற்றுள்ளேன் அந்த அடிப்படையில் தான் அவர் வழியில் நின்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் முதலமைச்சருடன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உடனிருந்தனர். முன்னதாக போராட்டக் குழு சார்பில் அரிட்டாபட்டி விவசாயி சுரேஷ் வரவேற்றார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற முதலமைச்சர், அரிட்டாபட்டியை சேர்ந்த அய்யங்காளை என்பவரது ஆண் குழந்தைக்கு வெற்றி என பெயர் சூட்டினார்.
* கும்மி கொட்டி வரவேற்பு
அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மந்தை கருப்பையா கோயில் அருகே உள்ள சாவடி கலையரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதியில் திரண்டனர். பாரம்பரிய வழக்கப்படி கிராமப் பெண்கள் கும்மி கொட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலூர் பகுதிகளின் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் வாசல்களில் மாக்கோலமிட்டு முதல்வரை வரவேற்று வாசகங்கள் எழுதி வைத்து வரவேற்பளித்தனர்.
* வேளாண் மண்டலமாக அறிவிக்க தீர்மானம்
அரிட்டாபட்டியில் மேலூர் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார் செந்தாமரை தலைமையில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதேபோல் மேலூர் பகுதியின் பல்வேறு கிராமங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதற்கு தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மேலூர் விவசாய கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* நாடாளுமன்றத்தில் ஆதரித்தது அதிமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ஒன்றியத்தில் உள்ள பாஜ அரசை பொருத்தவரை, அக்கிரமங்களை, மக்கள் விரோத செயல்களை செய்து வருவது உங்களுக்கு நன்றாகத்தெரியும். மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில பாஜ அரசு கொண்டு வந்த சட்டம் தான் இதற்கு மூல காரணம்.
இந்த சட்டம் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றிய நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக என்ன செய்தது? எதிர்த்தார்களா? இல்லை. அப்போது மாநிலங்களவையில் இருக்கும் தம்பிதுரை என்ன பேசினார் தெரியுமா? இந்த சட்டத்தை ஆதரித்து வரவேற்று பேசினார். அது எல்லாம் டிவியில், சமூக வலைத்தளங்களில் பரவியது. நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். இதுதான் டங்ஸ்டன் திட்டத்திற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது’ என்றார்.
The post மக்கள், தமிழக அரசின் எதிர்ப்பே ஒன்றிய அரசு பணிய காரணம் டங்ஸ்டன் திட்டம் ரத்து, நமக்கான வெற்றி: அரிட்டாபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு appeared first on Dinakaran.