பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன், 1944-ம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும். முப்பது மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தியாகராஜ பாகவதர், தனது நெருங்கிய நண்பர்களையும் விருப்பமாகச் செல்லும் இடங்களையும் தவிர்த்துவிட்டு, கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினார். ஆன்மிக நாட்டம் அதிகமானது அவருக்கு.
தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர், இந்த வழக்கு விவகாரத்தால் மங்கிய தனது புகழை, அடுத்த படம் மூலம் உயிர்ப்பிக்க நினைத்தார். புனே சென்ற அவர், அங்கு அப்போது பிரபலமாக இருந்த பிரபாத் ஸ்டூடியோவில் ‘ராஜமுக்தி’ என்ற படத்தைத் தொடங்கினார். தனது நரேந்திரா பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த அவர், தனது நண்பரும் இயக்குநருமான ராஜா சந்திரசேகரிடம் அதை இயக்கச் சொன்னார்.