கராச்சி: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் 14 உறவினர்கள் மற்றும் 3 தீவிரவாத அமைப்பின் 70 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் கோட்லி தீவிரவாத முகாமின் தளபதியும் இஸ்லாமிய மத தீவிரவாத போதகருமான காரி முகமது இக்பால் மற்றும் 10 தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடந்த விமானத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசாரின் உறவினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் மசூத் அசாரின் சகோதரி மற்றும் மைத்துனரும் அடங்குவர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அழிக்கப்பட்ட 9 தீவிரவாத முகாம்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பஹவல்பூர் தலைமையகத்தில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் முரிட்கே தளத்தில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் முகாமை சேர்ந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முக்கியமான தீவிரவாதிகள் பட்டியலில், ஜுபைர் அஹ்மத் வானி என்பவன், ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். இவன் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவன் என்று கூறப்படுகிறது.
சையத் முகமது அலி என்பவன் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஆவான். இவன் முரிட்கே முகாமில் கொல்லப்பட்டான். மசூத் அகமது மிர் என்பவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயிற்சியாளன் ஆவான். இவன் பஹவல்பூர் தாக்குதலில் கொல்லப்பட்டான். இந்த தீவிரவாதிகளின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டாலும், மற்றவர்களின் பெயர்கள் அல்லது அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 இந்திய விமானத்தை பாக். சுட்டு வீழ்த்தியதா?
பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், 5 இந்திய போர் விமானங்கள் மற்றும் 1 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விமானங்களை இயக்கிய விமானிகளின் பெயர்கள் அல்லது அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் பாகிஸ்தானின் இந்த கூற்றை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. மேலும் தங்களது விமானங்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக தெரிவித்தது. இந்திய ராணுவம் தரப்பில், ஒரு பாகிஸ்தான் போர் விமானம் ஸ்ரீநகருக்கு அருகில் பாம்போரில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அந்த விமானத்தின் விமானியின் பெயர் அல்லது அடையாளம் வெளியிடப்படவில்லை. இந்த விமானம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை அனைத்து கட்சிக் கூட்டம்;
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மசூத் அசாரின் 14 உறவினர்கள் மரணம்; 3 தீவிரவாத அமைப்பின் 70 தீவிரவாதிகள் பலி: இந்திய ராணுவ தாக்குதலில் அதிரடி appeared first on Dinakaran.