மஞ்சூர் : மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மணியாபுரம் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் பிரசித்திப் பெற்ற இந்த கோயிலின் 32-ம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் 18-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தல், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் பட்டத்தரசி அம்மன் திரு வீதி உலா சென்றார். உடன் ஏராளமானோர் மாவிளக்குகள் மற்றும் தீச்சட்டிகளை ஏந்தியும், பறவை காவடி எடுத்தும் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த பிரம்மாண்டமான குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கினார்கள். அப்போது சுற்றிலும் இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டார்கள்.
இதைதொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் மணியாபுரம் குன்னக்கொம்பை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மஞ்சள் நீராடுதல், அம்மன் குடிவிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் விழாவை முன்னிட்டு வானவேடிக்கை, சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
The post மஞ்சூர் அருகே மணியாபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் 32-ம் ஆண்டு தேர் திருவிழா appeared first on Dinakaran.