சென்னை: அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மார்ட் போர்டு) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பலகைகளில் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயர் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலர்களும் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை செல்போனில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மணற்கேணி செயலியை ஆசிரியர்கள் பயன்படுத்துவதை பதிவேற்ற தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.