புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமித் ஷா, "இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாகவே மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது. இவை கலவரமோ அல்லது பயங்கரவாதமோ அல்ல. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளக்கத்தின் விளைவாக இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறை இது. டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை சுமார் 4 மாதங்களாக மணிப்பூரில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. முகாம்களில் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.