கிராமம் ஒன்றில் கேபிள் நெட்வொர்க் நடத்தும் மதகஜராஜா (விஷால்), தனது பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்துக்காக அவர் ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களான கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகியோரை சந்திக்கிறார். அப்போதுதான் தனது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. அந்த பிரச்சினைகளைச் சகல வல்லமை கொண்ட மதகஜராஜா எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை எக்கச்சக்க காமெடி, ஆக்‌ஷனோடு சொல்கிறது கதை.
12 வருடத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கும் படம் என்றாலும் பெரிய பாதகம் ஏதுமில்லை. காரணம், சுந்தர்.சி படங்களில் இருக்கும் பரபரக்க வைக்கிற நகைச்சுவையும் ஆக்ரோஷ ஆக்‌ஷனும் சந்தானத்தின் டைமிங் பன்ஞ்சும் எக்காலத்துக்கும் ஏற்ற படமாக மாற்றியிருக்கிறது இதை.