சென்னை: மானியக் கோரிக்கை மீது அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்புகள்:
1) போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டிற்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வழங்குதல்.
போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, வேகம், துல்லியம் மற்றும் எளிய பயன்பாட்டினைக் கொண்ட கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் (Hand held oral fluid drug testing devices), சென்னை நீங்கலாக 37 மாவட்டங்கள் மற்றும் சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 பெருநகரங்களில் உள்ள அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகங்களுக்கு தலா ஒன்று மற்றும் அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு 4 என மொத்தம் 50 சாதனங்கள் வழங்கப்படும்.
2) போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்க, போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கம்’ என்ற சிறப்பு பதக்கம் உருவாக்கப்பட்டு அதனுடன் அன்பளிப்பு தொகையாக ரூபாய் 50,000 கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்படுகிறது. மேற்படி பதக்கங்கள் 2025-26 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 15 என்ற எண்ணிக்கையில் உயர்த்தி வழங்கப்படும்.
3) அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை பிரிவில் நிறுவப்பட்ட சைபர் ஆய்வகத்தைப் பயன்படுத்துவதற்கான டிஜிட்டல் தடயவியல் கருவிகள், OSINT (திறந்த மூல நுண்ணறிவு) கருவிகள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பகுப்பாய்வு கருவிகள் வழங்குதல்.
ஆன்லைன் போதைப் பொருட்கள் கடத்தல், டார்க் நெட் சந்தைகள், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராட இணைய ஆய்வகம் (cyberlab) கருவிகள் இன்றியமையாததாக உள்ளது. எனவே, அமலாக்கப் பணியகத்தின் இணைய ஆய்வகம் (cyberlab) பயன்பாட்டிற்காக டிஜிட்டல் தடயவியல் கருவிகள், இருண்ட வலை கண்காணிப்பு மற்றும் OSINT (திறந்த மூல நுண்ணறிவு) கருவிகள், நெட்வொர்க் மற்றும் சைபர் அச்சுறுத்தல் நுண்ணறிவு கருவிகள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி பகுப்பாய்வு கருவிகள் ஆகியவை அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரூபாய் 50 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
4) புலனாய்வு சேகரிப்பு பணிகளை கணினிமயமாக்குதல் மற்றும் அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CIU) ஒரு பிரத்யேக இணையதள வலைவாயில் (web portal) நிறுவுதல்.
அமலாக்கப் பணியகத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு (CIU), நுண்ணறிவு தகவல்கள் சேகரிப்பு மற்றும் பல்வேறு புள்ளி விவரங்களை களப் பிரிவுகளில் இருந்து சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளது. தினசரி புள்ளி விவர அறிக்கைகள் மற்றும் களப் பிரிவுகளில் இருந்து உளவுத் தகவல்களைத் தானாகச் சேகரிப்பதற்கு ஒரு பிரத்யேக இணையதள வலைவாயில் (web portal) கட்டமைப்பது இன்றியமையாததாகும். எனவே, நுண்ணறிவு சேகரிப்பு பணியை கணினிமயமாக்குவதற்கும், தினசரி புள்ளி விவர அறிக்கைகளை தானியங்கி முறையில் தயாரிக்க பிரத்யேக இணையதள வலைவாயில் (web portal) அமைப்பதற்கும் அமலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
5) கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி, மனந்திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளத்தனமாக அயல்நாட்டு மதுபானங்கள், தெளிந்த சாராவி ஆகியவற்றை கடத்துதல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை சுயதொழில்களில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களின் சமூக, பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்த, நபர் ஒருவருக்கு ரூபாய் 50,000 மானியமாக வழங்குவதற்கு ஏதுவாக ரூபாய் 5.00 கோடி மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்.
மேலும், இத்திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகளுடன் இணைந்தும் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலமும், அவர்களுக்கான திறன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்படும்.
6) கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துதல்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்துதல் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ரூபாய் 5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் என கூறியுள்ளார்.
The post மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு; மானியக் கோரிக்கை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.