மதுரை: அம்ரூத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் வழங்க செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனர் சித்ரா விஜயன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும், சீரான முறையில் தினந்ேதாறும் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது. அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் வருமாறு: முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை மற்றும் ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல்.
பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல். இதேபோல் பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல். பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 55.44 கி.மீ தூரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல். 37 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் ஒரு தரைமட்ட தொட்டி ஆகியவற்றை கட்டுதல். மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் உள்ள 32 வார்டுகளில் 855 கி.மீ நீளத்திற்கும் மற்றும் மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள 57 வார்டுகளில் 813 கி.மீ நீளத்திற்கும் குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்குதல்.
இப்பணிகளை ஐந்து பிரிவுகளாக முடிக்க திட்டமிடப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலையம், பொதுப்பணித் துறை மூலம் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக பண்ணைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டறிந்தார். முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
முன்னதாக மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகில், செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாய் பணிகளையும் கமிஷனர் ஆய்வு நடத்தினார். மேலும் செல்லூரில் உள்ள மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு முறைகள், அதன் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின் போது தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, செயற்பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி, சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
வளர்ச்சித் திட்டங்களின் பட்டியல்…
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சித்ரா விஜயன், மதுரையில் நடந்து வரும் அரசு வளர்ச்சித்திட்டங்கள் குறித்த பட்டியலை, தகுந்த புள்ளி விபரங்களுடன் கேட்டுப்பெற்றுள்ளார். இதில் பிரதான திட்டங்களை முன்னிறுத்தி தினமும் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு, அதனை வேகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மதுரையின் குடிநீர் விநியோகத் திட்டத்துடன், அடுத்தடுத்த நாட்களில் வரி வசூல், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதுடன், இதுதொடர்பாக துறைகளின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக விறுவிறுப்பாக நடைபெறும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப் பணிகள் appeared first on Dinakaran.