மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நாளை மதுரையில் துவங்கிறது. மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்டுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு நாளை(ஏப்.2) முதல் ஏப்.6ம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1,200 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் தற்போது நாட்டில் நிலவிவரும் அரசியல், பொருளாதார சூழல், எதிர்கால தேர்தல்கள், தேர்தல் கூட்டணி, கட்சியின் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்ற உள்ளனர். இதோடு, தமிழறிஞர்கள், திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், பேரணி என 5 நாள் மாநாடு நடக்கிறது. ஏப்.3ம் தேதி மாலை 5 மணிக்கு, ‘கூட்டாட்சி ேகாட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் நடக்கும் சிறப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.
ஏப். 6ம் தேதி கட்சியின் மத்தியக்குழு மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒன்று கூடி கட்சியின் புதிய அகில இந்திய பொதுச் செயலாளரை தேர்வு செய்கின்றனர். சீத்தாராம் யெச்சூரி, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த நிலையில் இறந்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் இடைக்கால பணிகளை கவனிக்கும் வகையில் ஏற்கனவே பொதுச்செயலாளராக இருந்த பிரகாஷ் காரத். ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை பொதுச்செயலாளராக இருந்துள்ளதால், மீண்டும் இவரை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. மறைந்த சீத்தாரம் யெச்சூரியும் 2 முறை பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ளார். அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தில் இருந்தும் தேர்வு செய்யவாய்ப்பில்லை. இதனால், மற்ற மாநிலங்களுக்கும் பிரதிநித்துவம் அளிக்கும் வகையில்தான் புதிய பொதுச்செயலாளரை தேர்வு ெசய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த முறை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவரை புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன்படி, கேரளாவைச் சேர்ந்த மத்தியக்குழு மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மத்தியக்குழு உறுப்பினர் விஜயராகவன் ஆகியோரது பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படலாம். இதில், எம்.ஏ.பேபி, கட்சியின் 24வது அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post மதுரையில் 5 நாட்கள் நடக்கிறது; மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு நாளை துவக்கம்: புதிய பொதுச்செயலாளராக கேரளாவின் எம்.ஏ.பேபி தேர்வு? appeared first on Dinakaran.