மதுரை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழப்புகளை தாண்டி, நடப்பாண்டு பாரம்பரிய அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டம், ஒழுங்கு பிரச்சனையில்லாமல் வெற்றிகரமாக நடந்துள்ளது. அதனால், கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக இந்த போட்டிகளுக்காக பணியாற்றிய உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அரசு அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை நிம்மதியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான், எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு பொங்கல் பண்டிகையையும், ஜல்லிக்கட்டையும் தென் மாவட்ட மக்கள் பிரித்துப்பார்க்க மாட்டார்கள். அதனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை, திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது நவீன காலத்திற்கு தகுந்தார்போல், கிரிக்கெட் மைதானம் போல் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்ட மைதானம் அமைக்கும் அளவிற்கு, ஜல்லிக்கட்டு போட்டிகள், மதுரையை தாண்டி உலகளவில் பிரபலமடைந்துள்ளது.