மதுரை: மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கள் முன்பதிவு நிறைவு பெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய முன்பதிவு, இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், 10,000க்கும் மேற்பட்ட காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்பதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி, உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லுார்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் அவர்களுக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜன. 14ல் அவனியாபுரத்திலும், 15ல் பாலமேட்டிலும், 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நிறைவு appeared first on Dinakaran.