மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 1.2 லட்சம் பார்வையாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நாட்களில் திருவிழா போல் கோலாகலமாக நடத்தப்படும். தமிழக அரசு இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள செய்து, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள், விஐபிகள், முக்கிய பிரமுகர்கள் காளைகள் பங்கேற்பதால் இந்தப் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக இருக்கும். உள்ளூர் பார்வையாளர்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை இந்த போட்டிகளை பார்ப்பதால், மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்ற போட்டியாக கருதப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், விஐபிகள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்காக பிரத்தியேக கேலரிகள் அமைக்கப்படுகின்றன. உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக தனித்தனி கேலரிகள் அமைக்கப்படுகின்றன. மேலும்,போட்டி நடைபெறும் பகுதிகளை சுற்றி எல்இடி டிவிகள் வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டு திருவிழா குழுவினரும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து சுற்றுலாத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஒட்டுமொத்தமாக காலை முதல் மாலை வரை பார்த்து சென்றுள்ளனர். இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த காலத்தை காட்டிலும் அதிகமாக பார்க்கப்படுகிறது. அதுபோல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை 40 ஆயிரமும், பாலமேடு ஜல்லிக்கட்ட போட்டியை 45 ஆயிரம் பேரும் பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால், அலங்கநால்லூர் வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருமே நேரடியாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க முடியவில்லை. கேலரியில் இடம் கிடைக்காததால் எல்இடி டிவிகளில் பார்த்துள்ளனர். பலர், அலங்காநல்லூர் கிராமத்திற்கு வந்து, நேரடியாக பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். அடுத்த ஆண்டில் இன்னும் விரிவான ஏற்பாடுகளை செய்யப்படும்” என்றார்.
The post மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க 1.2 லட்சம் பேர் வருகை: கடந்த ஆண்டை விட அதிகம் appeared first on Dinakaran.