மதுரை: மதுரை ரயில்வே கோட்ட எம்பிக்கள் கூட்டத்தில், தென்மாவட்ட வளர்ச்சிக்காக விவாதிக்க வேண்டிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பயணிகள் சங்கத்தினர் பட்டியலிட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், தொழில் வளர்ச்சி இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால், அவைகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். எனவே, தென்மாவட்டங்களில் தொழில் வளம் பெருகி வேலைவாய்ப்பை பெருக்க, ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்தில் வரும் 24ம் தேதி தென்மாவட்ட எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், விவாதிக்க திட்டங்கள் குறித்து தென்மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் விருதுநகர்-மானாமதுரை, திருநெல்வேலி-திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இவைகளை புதுப்பிக்க வேண்டும். புதிய பாம்பன் பாலம் திறப்பிற்கு பின்னர் வடமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் அதிக பக்தர்கள் வருகை தந்து கொண்டு உள்ளனர். இவர்கள் மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்ல போதிய ரயில் வசதிகள் இல்லை. மேலும் மதுரை-ராமேஸ்வரம் இரட்டை ரயில் பாதையாக மாற்றி அமைத்தால் ரயில் போக்குவரத்து அதிகப்படுத்தலாம். இதனால், மதுரை கோட்டத்திற்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விருதுநகர்-செங்கோட்டை ரயில் வழித்தடத்தில், மேலும் ஒரு புதிய வழித்தடம் இணையாக உருவாக்கபட்டு இரட்டை வழிப் பாதையாக மேம்படுத்தப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும். வாரம் மும்முறை செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில் தினசரி செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட வேண்டும். கொல்லம்-சென்னை விரைவு ரயிலில் செங்கோட்டையில் மேலும் கூடுதல் பெட்டிகளை இணைக்கப்பட வேண்டும். செங்கோட்டை-சென்னை முழுவதும் பொதுப் பெட்டிகளுடன் அந்த்யோதயா ரயில் தினசரி இயக்கப்பட வேண்டும். செங்கோட்டை-பெங்களூர் சங்கரன் கோவில், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக தினசரி இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும்.
செங்கோட்டை-ஈரோடு சங்கரன் கோவில், மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர் வழியாக தினசரி இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும். மதுரை வரை இயக்கத்தில் இருக்கும் சம்பர்க்கிராந்தி ரயிலை செங்கோட்டை வரை இயக்க வேண்டும். மதுரை-திருவனந்தபுரம் இடையே இண்டர் சிடி எக்ஸ்பிரஸ் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் இயக்கப்பட வேண்டும். செங்கோட்டை-மதுரை இடையே குறைந்த கட்டண மெமு (கழிவறைகளுடன் கூடிய) ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.சங்கரன் கோவில்-திருநெல்வேலி இணைப்பு ரயில் தடம் வேலைகள் தாமதமின்றி தொடங்கப்பட வேண்டும். மதுரை-போடிநாயக்கனூர் வழிதடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்களுக்கான போக்குவரத்து எளிதாக இருக்கிறது. மதுரை நகரில் ரயில் எஞ்சின் பணிமனை உள்ளது. எனவே, இங்கு மெமு பணிமனை அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய போக்குவரத்து வசதி கிடைக்கும். பஸ் போக்குவரத்தை விட மிகக்குறைந்த செலவில் பயணத்தை பொதுமக்கள் பெற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post மதுரை ரயில்வே கோட்ட எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய திட்டங்கள் என்னென்ன: பட்டியலிடும் பயணிகள் சங்கத்தினர் appeared first on Dinakaran.