சென்னை: புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்து இருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு கண்டனம் வரும்போது, மத்திய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது, தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா? என்று பார்ப்பது போல் இருக்கிறது மத்திய அமைச்சரின் கடிதம்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (பிப்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழகம் தரமான கல்வியைத் தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.