புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதிலும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவரை குதிரைப்படை வீரர்கள், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்று மக்களவைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு இந்திய குடியரசு தனது 75-வது ஆண்டை நிறைவு செய்தது. இது நாட்டின் கவுரவத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நேரத்தில், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் மற்றும் தலைவர்களுக்கு இந்திய மக்கள் சார்பில் புகழாரம் சூட்டுகிறேன்.