புதுடெல்லி: ‘மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன?’ என நேற்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளில், ‘மத்திய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?
குறிப்பாக இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு? இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் என்ன? பிரவாசி கௌஷல் விகாஸ் யோஜனா(பிகேவிஒய்) என்ற திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட வாரியாக, குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வளவு?’ ஆகிய கேள்விகளை கேட்டிருந்தார்.